ஒப்பில்லா உழவு
July 22, 2013
வெண்பனி விரட்டி வெளிர்கதிர் வீசிவிட்டு
வெள்ளைப் பகலவன் பல்துலக்கி வருமுன்னே
சிறுநகரப் பெருமுனையில் குப்பைக் கூவமாய்
சிறுபுல் முளைக்காப் புழுதிக் காட்டிலேநான்!
அச்சிறு காடும் அங்கேயொரு குடிசையும்
அதிகாரப் பூர்வமாய் எந்தன் சொத்துக்கள்!
சொத்தாய் இருந்ததைச் சுத்தமாய் சுரண்ட
சொர்க்கமாய் பணத்தாசை காட்டும் தரகன்!
படித்த படிப்பிற்கு பணியேதும் கிட்டவில்லை
புன்செயினும் விற்கும் எண்ண மேதுமில்லை,
இருப்பதை வைத்து கிடைத்ததை விதைக்க
இதயமும் கல்வியும் ஒத்துழைக்கச் சம்மதம்!
கள்ளியை அகற்றி மண்மாதிரி எடுத்து
கற்றோர் சிலரைத் தேடிதூரம் போனேன்
பெற்ற உதவியைப் பொக்கிஷமாய் கொண்டு
பயிர்செயும் முறையைப் பயின்று பழகினேன்,
அக்கம் பக்கம் சொற்பம் புரட்டி
ஆவண எல்லாம் போராடிப் பெற்றேன்,
விந்தை நிலத்தில் விதைத்தேன் வியர்த்தது
விரும்பினேன் விளைந்தது இளமைப் பயிர்கள்!
விவசாயம் வெட்க மில்லாதான் வேலையில்லை
விரும்பிச் செயும்போது வயதோர் தடையில்லை
பசியோடு வரும்போது வயிறாற்றும் விவசாயி
பட்டமேதும் வாங்காமல் ஊர்பெரியவன் நான்!